Saturday, December 30, 2017பாடுபட்டு சுதந்திரம் பெற்ற தேசமே, 
பெருமை கொள்!

மதிப்பு கூடிவிட்டது!
பெருமிதம் கொள்!

சுதந்திர மனிதன் 
தன் மதிப்பை அறிந்துகொண்டான், இன்று!

பேரமில்லை, வார்த்தைகளில்லை!

அவன் வாக்குக்கு, ஆயிரம் மரியாதை!

 மனசாட்சிக்கு...?Thursday, November 30, 2017

வானம் வசப்படும்!
தொட்டுவிடும் தூரம்தான்!
ஏணிப்படிகள் !

எல்லாம் சொல்லி, இருப்பவனைத்  தூக்கி மேலே வீசினோம்!

இங்கே, இருக்க, என்ன செய்தோம்?

இருக்க இடம் கொடாமல், பறக்க வழி சொல்லும் பயனிலிகள்!

ஊருக்கு மட்டும் தான், உபதேசி! 

தனக்கென்றால், எவன் காலிலேனும் விழுந்து, 

தன்னிடம் தக்க வைப்பவன்தான், 

இன்று சிறந்த சிந்தனையாளன்! 

சமூக சேவகன்!

புரட்சிக்காரன்!

கலியுகத்தில், விளக்கு மட்டும் தலைகீழாக எரியவில்லை!

மனிதனும்தான்!

மனிதாபிமானத்தை எரித்து!
Wednesday, October 25, 2017

Dear Friends,

                   
           Welcome and glad to receive YOU ! We wish to convey our sincere warm greetings to one and all !.


Have a happy stay in ORU VINADI !

Warm greetings,

GnanA.

சிந்திக்க!        செயல்பட!

Saturday, September 23, 2017


ஒரு வினாடியில் உங்கள் கருத்துக்கள்,
 எமக்கு ஊக்கம்! 
வாருங்கள், எண்ணங்களைப் பகிருங்கள்..!

வாழ்த்துக்கள்!

ஞானா.

Saturday, August 26, 2017

மனிதரின் எண்ணங்கள் வளமாகட்டும்! 
 அன்று விக்ரம்,  இன்று விவேகம் !


வணக்கம்,
             
        விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்வுடன் நீங்கள் கழித்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில், நமது எண்ணங்களைப்பற்றிய பதிவுகளின் மூன்றாம் பாகத்தை இன்று துவங்கலாம், என்று இருந்தோம். ஆயினும், சில நிகழ்வுகள் நமது எண்ணங்களை வலுப்படுத்த, ஒரு சாட்சியாக நேற்றும் இன்றும் நிகழ்ந்து, அதன் தொடர்ச்சியாக இந்தப்பதிவை, தங்களுடன் பகிர விருப்பம். எண்ணங்களை வலுவாக்க, இவற்றை நாம் நிகழ்கால உதாரணங்களாக, எடுத்துக்கொள்ளலாம்.

      தற்சமயம் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம், அத்தனை ஆரோக்கியமாக இல்லை என்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்திருப்பர், விரைவில் நல்ல எண்ணங்கள் ஆளுமைபெற்று மக்களுக்கு நல்ல மாற்றங்கள் கிடைக்கும் என்ற ஆழ்மன சிந்தனையில், நாம் சற்றே அரசியலை விட்டு விலகி, கலைத்துறையை பார்வையிடுவோம்.

      அதற்குமுன்னால், தமிழர்களாகிய நமது மனநிலையை சற்றே சீராய்வோம். உலகில் எங்கும் இல்லாத கலவையான மனநிலையைக்கொண்டவர்கள் தமிழர்கள் என்பது மேற்கத்திய ஆய்வாளர்களின் கருத்து. உலகநாடுகள் அனைத்துக்கும் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நமது தேசத்தில், அனைத்துவகை கலாச்சார மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது ஒரு ஆச்சரியம் என்றால், ஒரே கலாச்சாரம் கொண்ட தமிழர்கள் பல்வேறு மனநிலைகளில் வாழ்வது, மற்றொரு ஆச்சரியம்!.

      ஆம், வந்தாரை ஆதரிக்கும் தமிழன், தன் உடன் உள்ளவனை அத்தனை சீக்கிரம் ஆதரிப்பதில்லை, அவர்களின் புது முயற்சிகளை எள்ளி நகையாடுவதும், முன்னேற்றத்தை தடுக்க எண்ணுவதுமாக நம் மனநிலை இருக்கிறது. இது இன்று நேற்றல்ல, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இருந்ததுதான். அதனால்தானே, மூவேந்தர்கள் நம் தமிழகத்தை, பிரித்து ஆண்டுவந்தனர், இதுதவிர குறுநில மன்னர்கள் வேறு. அரசர்கள் என்றில்லை, புலவர்கள் கூட, அப்படியேதான் இருந்தார்கள். அரசர்களைத் தாண்டிய புலவர்.ஒட்டக்கூத்தரின் தலைக்கனம் கொண்ட  அடக்குமுறை, புகழேந்தி  மற்றும் கம்பரிடம்  அவர் காட்டிய விரோதம், நாம் படித்ததுதானே! 

      மொழியால் ஒன்றுபட்ட தமிழன், தனிமனித ஆளுமை எண்ணங்களால், ஒருவரை ஒருவர் போரிட்டு அழித்துக்கொள்ளவில்லையா? இந்த மனநிலைகள்தானே, பின்னாளில் நம்மை ஆளவந்த ஆங்கிலேயர்களுக்கு வசதியாகி, அவர்கள் நம்மைப்பிரித்தேவைத்து ஆட்சிசெய்து, நம்மை அவர்களின்  அடிமைகளாக்கி வைத்திருந்தனர். 

இவற்றுக்கு எல்லாம் என்ன காரணம்?

தமிழன் வெளியில் இருந்து வருவோரை, தன்னைவிட உயர்வானவராக எண்ணி, அவர்களிடம் அடங்கிப்போவதுதான். அந்த எண்ணங்களை தவறு என்று கூறி, ஆதிக்கக்காரர்களை அழிக்க நம்மில் ஒருவர் வீறுகொண்டு எழுந்தால், அவர்களை காட்டிக்கொடுப்பதும், நம்மவர்கள்தானே!

உடனிருந்தே காட்டிக்கொடுத்த துரோகத்தால்தானே, வீரபாண்டிய கட்ட பொம்மன், தூக்கில் தொங்கினான், இதுபோல ஏராளமான அவலக்காட்சிகள் உண்டு, நமது நீண்ட வரலாற்றில்.

      ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்னால், இந்திய தேசம் கடந்து, கடல்வழியே பல கீழை தேசங்களை போரில் வென்று, பேரரசனாக முடிசூடி, தனித்துவமிக்க அரசாட்சி நடத்தவில்லையா, இராஜராஜ சோழன்? தேசம் கடந்து கொண்டாடப்படவேண்டிய அவன் ஆற்றலை, ஆட்சித்திறனை, அக்காலத்திலேயே குடவோலை முறை மூலம் கிராம,நகர ஆட்சியர்களை மக்கள் வாக்கின் மூலம் தேர்ந்தெடுத்து, மன்னராட்சியிலேயே, ஜனநாயகத்தை நிலைநிறுத்தியவன் அல்லவா, மாமன்னன் இராஜராஜன்?

      ஆயினும், அவனையும் சிறு வட்டத்தில் அடைத்து தம் இனம் என்று பெருமைகொள்ளும் மனநிலைதானே, இங்கு காணப்படுகிறது, கப்பலோட்டிய சிதம்பரனார் முதல், திருப்பூர் குமரன் வரை, இதே நிலைதான்.

      ஆயினும், மகாகவி பாரதியாரை மட்டும் விட்டுவிட்டனர், ஒருவேளை, அவர் சாதி இரண்டொழிய வேறில்லை என்றதனாலோ?, போகட்டும்.

      பிற்காலத்தில் நாடு வெள்ளையரிடம் இருந்து விடுதலை பெற்றபின்னும், அந்த எண்ணங்கள் முழுமையாக நீங்கவில்லை என்பதும், நாம் அவ்வப்போது கண்கூடாக கண்டுவரும் நிகழ்வுகளால் தெரிகிறதுதானே. 

      சுதந்திர இந்தியாவில் முதல் முப்பது ஆண்டுகள் பழமையின் தழுவலில் நாம் இருந்தோம்,  வசதி படைத்தோர் மட்டுமே ஆடம்பர பொருட்களை, உபயோகிக்க முடிந்தது. எனினும் சமூகத்தில்  பணக்காரர்களின் சுகவாழ்வைக் கண்டு யாரும் அத்தனை பெரிதாக எண்ணவில்லை, எல்லோர் வாழ்வும் அவரவர் நிலைகளில் நலமுடனே இருந்த காலம் அது.  

      காலங்கள் மாற, புதிய உற்பத்திகள் தொடங்க, நாட்டு மக்களின் வாழ்வும் எண்ணங்களும் மாற ஆரம்பித்தன. ஆயினும், நம்மவர்களை ஆதரிக்காமல், வெளி தேச பொருட்களுக்கும், இயந்திரங்களுக்குமே முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர். அதனால்தான், உலகில் முதன்முதலில் ரேசர் பிளேடு கண்டுபிடித்த நம்ம ஊர் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு, மக்களால் புறக்கணிக்கப்பட்டார்.

       எத்தனை கண்டுபிடிப்புகள், அவை எல்லாம் மேலை நாடுகளில் யாராவது கண்டுபிடித்திருந்தால், கொண்டாடியிருப்பார்கள், நம்மில் ஒருவர், உயர்ந்தால், புதிய சிந்தனையில் ஏற்றம் பெற முயன்றால், அவரை உத்வேகப்படுத்தும் மனநிலையும் நம்மிடம் இல்லை, ஊக்கம் கொடுக்கும் எண்ணங்களும் இல்லை.

      ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூறுகள் வரை நாம் சாலைகளில் கண்ட தேசத்தின் சுதேசி வாகனம் "அம்பாசிடர் கார்" இப்போது சாலைகளில் காண்பதே, மிக அரிதாக  இருக்கிறது. உற்பத்தியும் நிறுத்தப்பட்டுவிட்டது.

      என்ன காரணம்? வசதிகள் வர, நம்மிடம் இருப்பதை உயர்வாக எண்ணாமல், அதிக சொகுசையும் ஆடம்பரத்தையும் தேடி, நம் தேச சாலைகளுக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவற்றின் மேல், மனம் இலயிக்கிறது. அதன் விளைவுகள் என்ன?

      எத்தனை மோசமான விபத்திலும் அம்பாஸடர் கார், முழுவதும் சேதமடைவதில்லை, இன்றைக்கு பல இலட்சங்கள்  கொடுத்து வாங்கும் நவீன உலகத்தர கார்கள் எல்லாம், சில விபத்துகளில் அப்பளம் போல நொறுங்கும் கொடுமையைக் கண்டு, மனம் பதைக்கிறோம்.

      கலைத்துறையில், தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என அழைக்கப்பட்ட ஜெய்சங்கர் அவர்கள்,  துப்பறியும் படங்களில், துடிப்பான கதாநாயகனாக நடித்து, தனிப்பெரும் கலைஞராக பல்லாண்டுகாலம் கோலோச்சினார். ஒரு கட்டத்தில் அவர் அதைவிடுத்து சமூகப்படங்களில் நடிக்க முயன்றபோது, அந்த முயற்சிகளை கலையுலகம் ஆதரிக்கவில்லை.  

      இதற்கு நிறைய உதாரணங்கள் கூற முடியும். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், கலைஞானி.கமலஹாசன் அவர்கள்  நடித்த ஒரு திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. அந்தத்திரைப்படத்தில், பல ஜாம்பவான்கள் இணைந்திருந்தனர். அதிக அளவில் மீடியா விளம்பரம் அக்காலத்திலேயே அப்படத்துக்கு, படம்  வெளிவரும் முன்னரே, கிடைத்துவந்தது. காரணம்? அப்படத்தின் கதையை பிரபல எழுத்தாளர்.சுஜாதா அவர்கள், ஒரு முன்னணி வார இதழில் தொடராக எழுதிவந்தார். திரைத்துறையில் அது ஒரு புதிய முயற்சி. 

      அந்தப்படத்தின் கதாசிரியர் ஆன சுஜாதா அவர்கள், வாராவாரம் எழுதிவந்த தொடர், வாசகரிடையே பெறும் வரவேற்பைப்பெற்றது. அந்தக்கதையே, கமலஹாசன் அவர்கள் நடிக்க, திரைப்படமாகிறது என்றவுடன், எல்லோரும் ஆர்வமாக தங்கள் அபிமான எழுத்தாளரின் படைப்பையும், அபிமான நடிகரின் நடிப்பையும் திரையில் எதிர்பார்த்தனர்.

      அது ஒரு மாறுபட்ட கதைக்களத்தில் பயணப்பட்ட கதையாதலால், கதையைப்படமாக்க, படக்குழுவினர், பல இடங்களில் படப்பிடிப்பை நடத்திவந்தனர். பலரின் கடின உழைப்பில், மிக அதிக பொருட்செலவில் தயாரானது படம். 

      இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில், பாடல்கள் எல்லாம், பட்டிதொட்டி எங்கும் பட்டையைக்கிளப்பின.  “வனிதாமணி, வன மோகினி வந்தாடு” “என் ஜோடி மஞ்சக்குருவி”, “மீண்டும் மீண்டும் வா”, “விக்ரம், விக்ரம்” போன்ற பாடல்கள்.

ஆயினும் என்ன ?  

கமலஹாசன் அவர்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல இருந்த அந்தப்படம், எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை.

என்ன காரணம்?  

      சுஜாதா அவர்களின் வரிகளில் உள்ள ஜாலத்தை அப்படியே, படத்தில் எதிர்பார்த்தார்கள் அவர் வாசகர்கள். வார்த்தைகளை, வர்ணனைகளை அத்தனை எளிதாக காட்சிகளில் கொண்டுவரமுடியாதென்பதும் அது என்றும் அத்தனை சுலபமல்ல என்பதே, உலகறிந்த உண்மை. வார்த்தைகளில் உள்ளவற்றை காட்சிப்படுத்துவது,  பெரிய கலை. இரண்டாவது இராணுவ உளவாளி, விண்வெளி விஞ்ஞானம், இராக்கெட், அதைக் கடத்துதல் போன்ற கதையெல்லாம், அக்காலத்தில்  பாமர மக்களிடையே அத்தனை பரிச்சயம் இல்லாததும், ஒரு காரணம். 

      சுஜாதா அவர்களின் வாசகர்களுக்கு என்றும் அவர் இராஜாதான், நமக்கும்கூ, ஆயினும், திரைப்படம் என்பது ஒரு சாரார் மட்டுமல்லவே! படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரையும் ஈர்த்தால்தானே, படம் ஓடி, முதலீடு செய்தவர்களுக்கு, மகிழ்ச்சியுண்டாகும்.

      இன்றைக்கு உள்ளதுபோல, படம் வெளியாகி தியேட்டரில் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, படத்தைப்பற்றி எதிர்மறை செய்திகளை, பரவலாக சமூக வலைகளில் வதந்தி பரப்ப, அக்காலத்தில் வழி ஏதுமில்லை. தகவல் தொடர்பு எல்லாம் வாய்வழி மற்றும் வார தினசரி பத்திரிக்கைகள் வழியேதான். அவற்றில் வரும் விமர்சனங்களும் ,  ஒரு வாரம் கழித்துதான் வெளிவரும்.

    இன்றைய காலகட்டம் போல, படத்தின் முதல் காட்சி முடியுமுன்னரே, முதல் நாளிலேயே பத்திரிகைகள் விமர்சனம் செய்வது போல, அக்காலத்தில் இல்லை.

      திரைப்படங்களின் வெற்றி தோல்வி என்பது வேறு. கமலஹாசன் அவர்கள் ஒரு புது முயற்சியை மேற்கொண்டார். ஆயினும், பத்திரிக்கைகள் எல்லாம், தற்போது விமர்சனங்கள் என்ற பெயரில் நஞ்சை கக்குவதைப்போல, அப்போது செய்ததில்லை.இரசிகர்கள்தான் ஏற்கவில்லையே தவிர, பத்திரிக்கைகள் எல்லாம், தமிழில் ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான படம் என்று பாராட்டவே, செய்தன.

மாறட்டும் நமது மனநிலை!

      எதற்கு இங்கு, முப்பது ஆண்டுக்கு முற்பட்ட  கமலஹாசன் அவர்கள் படம் பற்றிய தகவல் என்றால், நேற்று முதல் நடந்து வரும் ஒரு விஷயமே, இதுபற்றி இங்கு எழுதத்தூண்டியது.

      பல மாதங்களாக தயாரிப்பில் இருந்து, புதிய சர்வதேச கதைக்களத்தில் சர்வதேசப்படங்களுக்கு இணையாக உருவாகிவருவதாக சொல்லப்பட்ட ஒரு படத்தைப்பற்றி, வியாழக்கிழமை காலை முதல் வந்த விமர்சனங்கள் எல்லாம், நம்மை ஒருகணம் உறையச்செய்துவிட்டன. அதிலும் பல, எதிர்மறையான, தனிப்பட்ட தாக்குதல் ரீதியிலான விமர்சனங்கள்.

      எப்படி சாத்தியம்? படம் பார்த்துக்கொண்டே, சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள்.

      படம் பார்க்கப்போவதாக விமர்சனங்கள் ஒரு பக்கம் என்றால், படம் வெளியாகி, ஒரு காட்சி கூட முடியாத நிலையில், முன்னணி தினசரிகளிலும், வார இதழ்களிலும் அவற்றின் இணையதளங்கள் மூலமாக வந்த விமர்சனங்கள், நம்மை சிந்திக்க வைத்தன.

      ஏன் இத்தனை அவசரம்? சமூக வலைகளில், மொபைல் போன் உள்ளோர், கருத்தை வேறெங்கும் பதிவிட வாய்ப்புகள் இல்லாதிருப்போர், அவர்கள் நண்பர்களிடையே படத்தைப்பற்றிய தகவலை, பகிர்வதில் தவறு இருக்கமுடியாது.

      ஆயினும், புகழ்பெற்ற பத்திரிக்கைகளுக்கு என்ன அவசரம்? சில தினங்கள் ஒடியபின், அவர்கள் விமர்சனங்களை வெளியிட்டால் என்ன? பல ஆண்டுகால கலை, எழுத்து, சமூக பாரம்பரியம் உள்ள பத்திரிகைகள் எல்லாம், திரைத்துறையை நம்பியே இருக்கின்றனவா? இந்த விமர்சனங்களால், அவர்கள் சாதிக்கப்போவது என்ன?

      என்ன காரணம் என்றால், பல கோடி செலவழித்து படம் எடுக்கிறார்கள், நடிகர்கள், தங்கள் கடும் உடல் உழைப்பை வெளிப்படுத்தி, ஒரு பெரிய படக்குழுவாக, பல மாதங்கள், ஏன் சில வருடங்கள் கூட சமயம் எடுத்து, தங்கள் உழைப்பை மாபெரும் வெற்றியின் மூலம் மக்கள் அங்கீகரிக்க வேண்டும், என்ற உத்வேகத்தில், தங்கள் படைப்பை வெளியிடும் நேரத்தில், அவை வெளியாகிய சில மணி நேரங்களில், பரப்பப்படும் எதிர்மறைக்கருத்துக்கள், அவர்களை பாதிக்கிறதோ இல்லையோ, அப்படிப் பகிர்பவர்களை, நிச்சயம் பாதிக்கும், அது எப்படி என்பதை, நமது எண்ணங்கள் பற்றிய தொடரில், பின்னர் காணலாம். 

      இங்கே நாம் கூறவிரும்புவது, நடிகர் அஜீத்குமார் அவர்களின் ஓராண்டுகால கடும் உழைப்பில், பல கலைஞர்களின் அர்ப்பணிப்பான பணியில், உருவான "விவேகம்" திரைப்படம் வெளியாகிய சில மணி நேரங்களில், இணைய வெளியில் வந்த விமர்சனங்களைத்தான். 

      எதற்கு இந்த அவசரம்?, ஊரில் பெரியவர்கள் சொல்வார்கள், “ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு” என்று. “அவசரக்காரனுக்கும் புத்திமட்டுதான்.”

      இன்றைய அறிவியல் தந்த உலகளாவிய தகவல் தொடர்பால், நான் படம் பார்த்துவிட்டேன் என்று எல்லோரும் அறியவேண்டும், என்ற ஆர்வத்தில் பலரிடம் பகிர்வதில் தவறில்லை, மாறாக, படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, படத்தைப்பற்றிய எதிர்மறை கருத்துக்களை இணையத்தில் பரப்ப வேண்டிய அவசரம், அவசியம் என்ன? இதுபோன்ற அந்தக்கலைஞர்களின் உணர்வை புண்படுத்தும் செயல்களை, பல சமயங்களில் நாம் கடந்தே, வந்திருக்கிறோம். இதில் அஜீத் மட்டுமல்ல, விஜய் மற்றும் எந்த நடிகரானாலும் அந்தப்படங்களின்மேல் நடத்தப்படும் இதுபோன்ற இணையத்தாக்குதல்கள், மிகத்தவறு. நமக்கு பிடிக்காவிட்டால், எதுவும் பேசாமலோ அல்லது எனக்கு படம் பிடிக்கவில்லை என்றோ சொல்லிச் சென்றால், அது நாகரீகம், மாறாக, அவற்றை மிக இழிவாக எள்ளி நகையாடுவது, முறையானதல்ல.

      இவை எல்லாம் சமூகத்தில், தனிமனித வாழ்வின் பாதிப்புகளை நமக்கு உணர்த்தும் செயல்களாகும். இவற்றை நாம் எண்ணங்கள் வழியே சரிசெய்ய, நீண்டகாலம் போராட வேண்டும், ஆயினும், மனங்களை நல்லெண்ணங்களால், வளமாக்கமுடியும்!.

      சரி, எதற்கு கமல் அவர்களின் விக்ரம் படத்தைப்பற்றி இங்கே குறிப்பிட்டீர்கள் என்கிறீர்களா? முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் உளவாளி, இராக்கெட் கடத்தல் என்ற ஒரு புதுக்கதைக்களத்தை,  எந்த நவீன தகவல் தொடர்பு சாதன வசதிகள் இல்லாத அக்காலகட்டத்தில், சுஜாதா அவர்களின் மிகப்புதுமையான அந்தக் கதையின் நாயகனாக நடித்து, சொந்தமாக தயாரிக்கத்துணிந்தார், கமல் அவர்கள்.

Image result for vikram movie kamalImage result for vivegam

      முப்பது ஆண்டுகள் கழித்து இன்று, கிட்டத்தட்ட அதே போன்ற கதைக்களத்தில், அதே போன்ற டைட்டில் வடிவத்தில், உளவாளி வேடத்தில், பயங்கரவாதிகளிடமிருந்து தேசத்தைக் காக்கும் நாயகனாக அஜீத் அவர்கள் நடித்து, இன்று உள்ள மிக மிக முன்னேறிய தொழில்நுட்பம் கொண்ட தகவல் தொடர்பு யுகத்தில், இந்தப்படத்தையும் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள மனநிலையில் அனேகம்பேர், படத்தை எதிர்மறையாக விமர்சிக்க, என்ன காரணம்?

      கமல் அவர்கள் மிக அருமையாக விக்ரம் படத்தில், இந்திய அளவில் நடிப்பின் அடுத்த தளத்துக்கு செல்ல வாய்ப்புள்ள வேடத்தில், நடித்திருப்பார், ஆங்கிலப்படங்களுக்கு இணையான கதையமைப்பில்.
     
      ஆயினும் அதிகம் பேர் ஆங்கிலப்படங்கள் பார்க்க வாய்ப்பில்லாத காலகட்டம் ஆதலால், அந்த நவீன கதை அக்காலத்தில், அனைத்துத்தரப்பினரையும் சென்று சேரவில்லை.

      இன்று, ஆங்கிலப்படங்கள் பல கண்டு பரிச்சயம் உள்ள தலைமுறையும், அஜீத் அவர்களின் படத்தை எதிர்மறையாக விமர்சிக்க என்ன காரணம்?

      அஜீத் அவர்களும், இந்திய அளவில் நடிப்பின் அடுத்த தளத்துக்கு செல்ல வாய்ப்புள்ள, ஆங்கிலப்படங்களுக்கு இணையான கதையமைப்பை இந்த வேடத்தின் மூலம் வெளிப்படுத்தியதை பாராட்டாமல், இன்றைய தலைமுறை, எதிர்மறை கருத்துக்களை திணிப்பது ஏன்?

      ஒரே காரணம், சமூகத்தில் எல்லா மட்டத்திலும் பரவலாகக் காணப்படும் தனிமனித முனைப்புதான். பரிணாம வளர்ச்ச்சி!

      யார் வேண்டுமானாலும், யாரையும் எதுவேண்டுமானாலும் சொல்லலாம், கையில் ஒரு மொபைல் இருந்தால் போதும் என்ற நிலை, சற்று மோசமானதும்கூட. இதையெல்லாம் எப்படி சரிசெய்ய முடியும்?

      அதெல்லாம் இருக்கட்டும், முதலில் நீங்கள் பதில் சொல்லுங்கள், மனித எண்ணங்களைப்பற்றி எழுதினீர்கள் சரி, இப்போது ஏன் திரைத்துறை பக்கம் வருகிறீர்கள்?, ஓ! நீங்கள் அஜீத் இரசிகரா!, அதுதான் இத்தனை கோபமா, என்று நீங்கள் கேட்டால், நம் பதில் இதுதான்.

      நாம் திரைத்துறையில் இல்லை, மேலும் எந்த நடிகருக்கும் இரசிகரும் இல்லை, நடுத்தர வயதில் இருக்கும் நமக்கு, நடிகர்களுக்கு துதி பாட வேண்டிய அவசியம் இல்லை. மேலும், நாம் திரைப்படம் பார்த்து, கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன.

      நமக்கு என்ன ஒரு ஆச்சரியம் என்றால், இப்போது வந்த “விவேகம்” திரைப்படமும் என்னைப்போன்ற வயதுடையோரின் இளைய வயதில் வெளியான “விக்ரம்” திரைப்படமும் அந்தந்த காலகட்டத்தில், புதுவிதமான உளவாளி சம்பந்தமான கதையமைப்புள்ள திரைப்படங்கள் என்பதும், இரண்டின் தலைப்பும், டைட்டிலும், டிஜிட்டல் வடிவில் அமைந்ததுமாகும்.

      அவை தற்செயலா, அல்லது வேறு ஏதேனும் காரணமா, என்று அறியவில்லை. ஆயினும் இந்த ஒற்றுமையே, எம்மை இந்தக்கட்டுரையை, அனைவரும் அறிய எழுதத்தூண்டியது.

      சரி, இவ்வளவு சொல்கிறீர்களே, உங்களால், இன்றைய காலத்துக்கு ஒத்த திரைக்கதையை உருவாக்கமுடியுமா என்று கேட்டால், நிச்சயம் முடியும் என்பதே, பதில்.

      பெரியவர்கள், “காலமறிந்து செயல்படு” என்பார்கள். பொதுவாக நடிகர்கள் அவரவருக்கு ஒத்த வேடங்களில் நடிக்க, எல்லோருக்கும் நலமாகும். அஜீத் அவர்களுக்கு, மிக அதிக செலவில்லாமல், அவருடைய இயல்பான ஆளுமைத்தன்மைகளிலிருந்து விலகாமல், அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற, படம் பார்க்கும் எல்லோருக்கும் பிடித்த படமாக, படம் தயாரிப்பவர்களுக்கும் நிறைவான ஒரு திரைப்படைப்பை, உருவாக்க துணைநிற்க முடியும். வேண்டுமானால், கதையைக்கூட ஒரு வரியில், இங்கே பகிரத் தயார்.

“நட்புக்காக, இலட்சியத்தை இழந்தவன்,
நட்பினால், இலட்சியத்தின் உச்சத்தை அடைந்த கதை!”.

     இன்றுவரை, பத்திரிகைகளில் வெளியிடாமல், யாரிடமும் வாய்ப்பு கேட்காமல், மனதிலேயே பல்லாண்டுகாலம் சுமந்து வரும் கதைகள் அவை. சில படைப்புகள் காலத்தை வென்று நிற்கும் என்ற ஆழ்மன உணர்வு உள்ளதால், வாய்ப்பு வரும்போது வரட்டும் என்ற சிந்தனையில், அமைதியாக இருப்போம்.

      இங்கே கலைத்துறை என்பது ஒரு உருவகம்தான், இதைப்போல தனிமனித தாக்குதல்கள் பல இடங்களில், பல தன்மைகளில் நிகழ்வதை, நாம் மௌன சாட்சிகளாக, அவற்றை கடக்கிறோம்.

      தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் ஒருவரைப்பற்றிய தகவலை முழுவதும் ஆராயாமல், அவசரமாக, செய்திகளை முந்தித்தரவேண்டும், தங்கள் ரேட்டிங்கை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில், இதுபோன்ற ஒருதலைப்பட்சமான தகவல்களை அளித்து, அந்தத் தகவலை சற்றுகூட ஆராயாமல், அதற்கு அதைவிட ஒருதலைப்பட்சமான கருத்துக்களால், நிந்தனை செய்யும் சமூக மனப்பான்மையின் மாற்ற நிலையை, இதுபோன்ற சம்பவங்களே, நமக்கு மாற்று எண்ணங்களின் தாக்கத்தை உணர்த்த, போதுமானதாகும்.

      எனவே, யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் எதிர்மறை கருத்துக்களை எங்கும் பதிவிட்டு, நம் மனநிலையின் நேர்மறை சக்திகளை, நாமே இழந்துவிடவேண்டாம்.

நம் எண்ணங்களின் மூலமாக, யாருக்கும் நலம் தராவிட்டாலும், குறைந்தபட்சம் நாம், நமக்காவது நட்பாய் இருப்போமே, நேர்மறை சிந்தனைகளில், செயல்களில்!

இது, நல்ல எண்ணங்களால், உலகை நாம் நேர்மறை ஆற்றலுடன் ஆளச்செய்ய, விடுக்கும் ஒரு நேரிய வேண்டுகோளாகும்!

நன்றி!

விரைவில், எண்ணங்களின் மூன்றாம் பாகத்தில் சந்திப்போம்...

ஞானா.

  

Wednesday, August 9, 2017

மனதின் வலி, விரல்கள் அறியுமா?விரல்களின் வலி, மனதுக்கு தெரியும் 
மனதின்  வலி, விரல்கள் அறியுமா?

கனவின் வலி, நிஜத்தில் தெரியும் 
நிஜத்தின் வலி,கனவுகள் அறியுமா?

அடுத்தவர்  வலி, அவருக்கு தெரியும் 
அவரின் வலி, நாம் அறிவோமா?

மனதின் வலியை,விரல்களால் 
போக்கும்  வல்லமை கொண்டு,

நல்ல எண்ணங்களை 
உலகில் சேர்ப்போம், 

 மனங்கள்,
வளமாக! 

- ஞானா.Sunday, July 30, 2017

இன்றைய நிஜம்!கனவாகிப்போன நிஜத்தின் எச்சம்,
இன்னும் இருக்கிறது,
காய்ந்த விழிகளின் ஓரத்தில்,
கசந்த வாழ்வின்  தழும்புகளாக!

மேலும் .வாசிக்க...

Thursday, July 20, 2017

கரையோரக்கனவுகள்
அலையே என்னைத் தழுவாயோ !
ஆசை முத்தம் அன்பாய்த் தாராயோ !
எத்தனை ஆண்டுகள்! எத்தனை யுகங்கள்!
எல்லாம் நொடிப்பொழுதாய் ஆனதே!
நித்தமும் உன் வருகை கண்டதும்!

வாசல் வரை வந்து நீ வாராமல் போனதென்ன,
என்னை காத்திருக்கச் செய்துவிட்டு,
நீ காணாமல் போவதென்ன.

என்ன பாவம் செய்தேன், நீ என்னை 
ஒதுக்குகிறாய்!
உன்னை நினைத்தது பாவமா!
உன் அணைப்பில் இருக்க எண்ணியதே பாவமா,
பார்க்கும்  போதெல்லாம், சிங்காரிக்கிறேன்,
பாராமல் போகும்போது  அழகழிக்கிறேன்!

என் வாட்டம் நீ கண்டால், வாடுவாய், 
எண்ணியே நான் மீண்டும் அலங்கரிக்கிறேன் 
உன் வரவுக்காக!

ஏமாற்றாதே அன்பே! நீ தந்த ஏமாற்றத்தையே 
வரமாக எண்ணி, விழிகளால் உன் வழி நோக்கி,
வருகிறேன் உன்னோடு!
அணைத்துக்கொள்! என் இறப்பிலாவது...!
...................................
...................................
நானும் நீயும் இணைந்தால், என்னை நீ அழித்திடுவாய்  
என உன்னை அழிப்பார் உலகோர், என்றே  விலகினேனடி!
அவர்கள்    நம்மை அழிக்குமுன்,
காட்டாற்று பாய்ச்சல் கொண்டு,கரையைக் கரைத்த புது வெள்ளம்,
உன்னையும் சுழற்றிவீசியதே! என்னில் உன்னைச் சேர்த்ததுவே!
நாம் ஒன்று சேர,  இதுவே வாய்ப்படி!
என்னால், உன்னைத் தொலைத்தாய்!
என்னில், உன்னை சுமக்கிறேன் நான்!
கண்ணீரலைகளின் ஓரத்தில் ..!

கரையோர நாணல்கள், அலையின் அணைப்பில்.. 
கரை சேரத்துடிக்கும் கதை.

ஞானா.

Sunday, May 28, 2017

ஆழக்கடலுக்கும் கரைகள் உண்டு!


ஆழக்கடலுக்கும் கரைகள் உண்டு!

ஏறாத மலைக்கும் ஒரு அடிவாரம் உண்டு!

ஒவ்வொரு வெற்றிக்கும் பல தோல்விகள் உண்டு!

கரையில் நின்றால், கால்கள் நனையலாம்,
அலைகளை வென்று ஆழ்கடலில் முத்தெடுக்க முடியுமா?

அடிவாரத்தில் இருந்தால் , காற்று வாங்கலாம்,
பாறைகளை வென்று உச்சியை எட்டி சாதிக்க முடியுமா?

தோல்விகளுக்குப்  பயந்தால், பாரமாய் வாழலாம்,
தடைகளை வென்று,  இலட்சியத்தை அடையமுடியுமா?


இடையூறுகளே, வெற்றியை நெருங்க வைக்கும்!

எண்ணத்தில் உறுதி கொண்டு, வெல்வோம் தோல்விகளை!

முயற்சிகள் வலுவாகும்!  இலட்சியங்கள் ஈடேறும்!!

Friday, May 26, 2017

விட்டு வைக்கலாம் இல்லையா,


எல்லோருக்கும், எப்போதும்
எவ்வித வேறுபாடும் கொள்ளாது, 
இலைகளை,கனிகளை,வேர்களை,
தன் நிழலை, நல்ல காற்றை வழங்கும்,
மரங்கள் போல், நாம் இல்லைதான் !

ஆயினும்,

நமது வருங்கால தலைமுறைகளுக்கும்,
தன்னலம் இல்லா மரங்களின் சேவைகள்  தொடர,

விட்டு வைக்கலாம் இல்லையா,
வெட்டாமல் ?!

நட்டு வைக்கலாம் இல்லையா, 
இடமெல்லாம்?!

மரங்களைப்போல, மனங்கள் இல்லாவிடினும்,
பட்ட கடனுக்காகவாவது...?!

Wednesday, May 17, 2017

வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள்!வெற்றிகளில் சாதனைகளை,  
படைத்தவர்க்கும் ,

சாதனைகளில் வெற்றிகளை, 
அடைந்தவர்க்கும்!Thursday, May 11, 2017

நம்பிக்கையே வாழ்க்கை!

நம்பிக்கையே வாழ்க்கை!சொல்லவும், ஒரு நம்பிக்கை வேண்டும் !

சொல்பவனிடத்தும், நம்பிக்கை வேண்டும் !

வெறும்  வார்த்தைகளை, சொல்வதும், கேட்பதும்,

படிப்பதற்கும், இடிப்பதற்கும் ஒப்பாகும்!

மனதின் வளம், வார்த்தைகளில்..!

மனிதனின் வளம், செயல்களில்..!

நல்ல எண்ணங்களைக்கொண்டு, ஏற்றம் பெறுவோம்! 

எங்கும் மனிதமே,  பேணுவோம்!


நல்வாழ்த்துக்கள்!

தோழமையுடன்,

ஞானகுமாரன்.
Wednesday, March 8, 2017

Have a happy stay in ORU VINADI!

Dear Friends,

                   
           Welcome and glad to invite our friends who read our articles from all over the World!. We wish to convey our sincere warm greetings to one and all.

Have a happy stay in ORU VINADI!

Warm greetings,

GnanA.Monday, January 16, 2017

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தமிழர் திருநாள் 
தைப்பொங்கல் நன்னாள் நல்வாழ்த்துக்கள்!
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நன்னாள்,
 உழவர்க்கெல்லாம் மகிழ்வும் வளமும் அளித்திட,
கழனியெங்கும் நெல்மணிகள் நிறைந்திட,
கரையெல்லாம்  நலமும் வளமும் கூடிட,
நல்லன அனைத்தும் வழங்கிட,
தரணியில் தமிழன் மீண்டும் தலைநிமிர்ந்திட,
கருணை மிக்க அட்சயப்பாத்திரத்துடனே, 
தை மகளே விரைந்து வா! வா!!
தமிழின் தொன்மையும் தீரமும் 
உலகோர் உணரவே!New Posts will be in your mail!

கமோடிடிவணிகம்–அறிமுகம்!

Total Pageviews