Tuesday, August 22, 2017

எண்ணங்களை தூய்மை செய்து, இலட்சியத்தை அடைவது எப்படி?


வணக்கம்!
எண்ணங்கள் - 2
Related image    

            நாம் முந்தைய பதிவில், இறைவனுக்கு நன்றி சொல்லக்கூறினோம், நம்பிக்கை உள்ளவர்கள் நன்றி கூறட்டும், இறைநம்பிக்கை இல்லாதவர்கள், இயற்கைக்கு நன்றி கூறலாம்!.

சரி எதற்காக, இந்த நன்றிகளெல்லாம்?  


வாழ்வின் சில நிலைகளில் நாம் தடுமாறினாலும், ஏதோ ஒரு நிகழ்வில் நாம் கரையேறிவிடமாட்டோமா, என்ற எண்ணங்களில், 


நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறானல்லவா, அதற்குத்தான். 


சரி, இனி நாம் தலைப்பின் வழி செல்வோம்.


      மனிதன் எண்ணங்களில், வெற்றியடைய, ஆயிரம் வழிகள் உள்ளன.
 நம் வாழ்வும், நம்மால் சமூகம் பயனுறவும், நல்வழியில் ஈடுபட்டு காரியமாற்றியவர்களுக்கு, சாதித்தபின் வரும் மரணமும், வெற்றிதான்!  எனவே, நாம் உயிரோடு இருப்பதே, வெற்றியை சுவைக்கத்தான், என உறுதிகொள்வோம்!

      வெற்றி என்ற ஒன்றை, நம் வாழ்வில் நாம் அடையாமல் போவதில்லை, என்று சபதம் ஏற்போம்! எந்த சமாதியிலும் அடித்து சபதம் செய்யாமல் (!?!), மனதிற்குள் இலட்சிய உறுதியில் நின்று, சபதமெடுப்போம்!

சற்றே சில, அனுபவ கதைகளைப்பார்க்கலாமா!

      ஒரு சிறுவன் தனது ஊரின் அருகாமையில் உள்ள ஒரு மலைக்குன்றின்மேல் ஏறி அதன் உச்சியை அடைய முயற்சித்தான். எத்தனை முறை முயன்றும், சிறிது உயரம் ஏறியதும், கால் வழுக்கி, அல்லது மேலே பார்த்து இன்னும் இத்தனை உயரம் இருக்கிறதா என்று மலைத்து கீழே விழுந்து தன் முயற்சிகளில் தோல்வியைத் தழுவினான். ஒரு கட்டத்தில், இலக்கை அடைய முடியாத வருத்தத்தில் மனம் வெறுத்தான்.

     நாமென்ன செய்வோம், அட, இது என்ன முடிவில்லாத போராட்டம், போதும், வேறு ஏதாவது முயற்சிப்போம், என்ற எதிர்மறை எண்ணத்தில், இலக்கை அடைய எண்ணிய மனதின் வலிமையை நாமே, குலைத்துவிடுவோம் அல்லவா?,


      ஆனால், தன் இலட்சியத்தில், எண்ணத்தில் உறுதியைக்கொண்டிருந்த அந்தச்சிறுவன் என்ன செய்தான் தெரியுமா? 

    மலையைப்பார்த்து, யேய், மலையே, நீ இனி வளரப்போவதில்லை, உன் உயரம் இப்படியே, இதே அளவில்தான் இருக்கும். ஆனால் நான் அப்படி இல்லை, என் முயற்சிகள் அப்படி இல்லை, நான் மீண்டும் மீண்டும் முயற்சிப்பேன், விரைவில் உன்னை உச்சியில் வந்து சந்திக்கிறேன், என்று சூளுரைத்தான்! 


 எத்தனை நெஞ்சுரம்! எத்தனை ஏற்றம் தான் கொண்ட உயரிய இலட்சியத்தில்! மனதில் கொண்ட இலக்கில், இடையூறுகள் ஏராளம் வந்தாலும், எண்ணங்களில் உறுதி கொண்டோர், அதையே படிக்கட்டுகளாக்கி வெற்றி பெறுகிறார்கள்! இறுதியில் சிறுவன் தன் இலட்சியத்தை அடைந்தான், என்று கூறவும் வேண்டுமோ?

      இதே போல இன்னுமொரு சம்பவம் மனதின் உயர்வை விளக்க, ஒரு சபையில் ஒருவர் மற்றவரைப்பார்த்து, இவர் நிறம் கருப்பு, நாமெல்லாம் சிவப்பு, இவர் இங்கே நம்முடன், நமக்கு பொருத்தமில்லாமல் இருக்கிறார் என்று மற்றவரை நிறத்தால் சிறுமைப்படுத்த நினைத்து எல்லோரிடமும் சொல்கிறார். அதைக்கேட்ட அந்த அறிஞர், இப்படி பதில் கூறினார்.

   "இறைவன் சிலருக்கு, நிறத்தை வெளியில் வைத்து, அறிவை உள்ளே வைத்துவிட்டார். அறிவாற்றல் மிக்கவர்கள் நிறத்தை ஆராய்ந்து, நேரத்தை விரயம் செய்வதில்லை, மாறாக, நிறத்தால் வெளுத்தவர்களை, அறிவிலும் மேன்மைமிக்கவராக மாற்ற வழிகளை யோசிப்பார்கள்", என்கிறார். 


      இங்கே, அவரின் தன்னம்பிக்கைமிக்க எண்ணத்தில் இருந்த உறுதிதானே, அவரின் சிந்தனைகள் இத்தனை உயர்ந்த அளவில் இருக்கக்காரணம்!.

 இப்படி, உயரம் குறைந்தவர்கள், உடல் குறைபாடு உள்ளவர்கள் எல்லோரும் சமயங்களில் மன உளைச்சல் அடையும்வண்ணம் கேலிக்குள்ளாவர், அவர்கள், எல்லோரும் நம்மை கிண்டல் செய்கிறார்களே, என்று எண்ணி கூனிக் குறுகி நடந்தால் என்னாகும்?, கேலிகள் அதிகமாகும் இல்லையா, 


   ஆயினும், நேர்சக்தி எண்ணங்களை மனதில் வளர்த்துக்கொண்டு, தங்கள் தேவைக்கு யாரையும் எதிர்பாராமல், மன உறுதிமிக்க செயல்களின் மூலம், கம்பீரமாக அழுத்தமான பதில்கள் தந்தால், கேலிகள் அங்கே காற்றில் பறக்கும் அன்றோ!


      இவையெல்லாம், எண்ணத்தில் நல்ல உறுதிகொண்டு, தங்கள் நிலையை உயர்த்தியவர்களின் செயல்கள்.

      சரி, நாம் எப்படி, நமது எண்ணங்களை உறுதியாக்கி, செயல்களை, நமது இலட்சியங்களை வசப்படுத்துவது?


Related image

      நாடு எல்லாத்துறைகளிலும் வளர்ச்சியடைந்த நிலையை எட்டவேண்டுமென்றால், அது வீட்டிலிருந்து தொடங்கவேண்டும் என்கிறார் பழந்தமிழ்ப்பாட்டி அவ்வையார். "வரப்புயர நீர் உயரும், நெல் உயரும், நெல் உயர குடி உயரும்" என்று. 

    இதையே புரட்சிக்கவி பாரதிதாசனும் தனது "குடும்பவிளக்கு" எனும் கவிநூலில், "நாட்டின் முன்னேற்றம் வீட்டின் செழிப்பில், மன மலர்ச்சியில் உள்ளது. தனி மனிதனின் வளமான வாழ்க்கையே, ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது என்கிறார்.


         எத்தனை வளமான கருத்துக்கள்! உண்மைதானே! வீடு எந்த பற்றாக்குறைகளும் இன்றி, குடும்பத்தார் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தானே, ஒருவன் நாட்டைப்பற்றி சிந்திக்க முடியும்!  


இன்று எங்கு காணினும் ஊழல்கள், நேர்மையின்மைதானே, தலை விரித்தாடுகிறது!

      அலுவலகம் செல்லும் பலர், அன்றாடம் சில அலுவலக நிகழ்வுகளை கண்டிருப்போம். வீட்டில் மனைவியிடமோ அல்லது பிறரிடமோ ஏற்பட்ட சண்டையால், அலுவலகத்தில் அனைவரிடமும் எரிந்துவிழும் எத்தனை மேலதிகாரிகள், சக ஊழியர்கள், ஏன் சமயத்தில் பஸ் கண்டக்டரிடம் கூட, அந்த அனுபவங்களைப் பெற்றிருப்போம், இல்லையா!
        
         எனவே நாம் முதலில், நமது மனதை வளமாக்கும் எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, நமது வாழ்வியல் சூழலை சரிசெய்வோம். பிறகு எல்லாம் தானாக, சரியாகிவிடும். 

      சரி, நாம் முதலில் நமது மனதில் தோன்றும் எண்ணங்கள் எப்படிப்பட்டவை, நம் எண்ணங்கள் நம் இலட்சியங்களை அடைய உதவுமா, என்று ஆராயப் பழகுவோம். ஏனென்றால், நம் இலட்சியங்களுக்கு மாறாக, நமது அன்றாட வாழ்வியல் எண்ணங்கள் இருக்கின்றன, 

     உதாரணமாக, ஒருவருக்கு நல்ல வேலை கிடைத்து, மனைவி மக்களுடன் இனிதே வாழவேண்டும், நல்ல வீடு வாங்க வேண்டும் என்ற இலட்சியம் இருந்தால், அவரின் இலட்சியம் ஒரு சுமாரான வேலை கிடைத்தவுடன், நீர்த்துவிடுகிறது,


   சரி, தற்காலம் இந்த வேளையில் இருந்துகொண்டு, நம் இலட்சியத்தை அடைய உதவும் நல்ல வேலையை தேடுவோம் என்ற சிந்தனை எண்ணம் மங்கிப்போய், கிடைத்ததில், மனம் சுகமாகிறது,


      இப்போதெல்லாம் வேலை கிடைப்பதே கஷ்டம், இனி எங்கு போய் வேலை தேடுவது, எனவே, இதிலேயே காலம் கடத்துவோம், என்ற சோம்பேறித்தனமான மனநிலைக்கு, இலட்சியங்கள் பலியாகின்றன.  

  சரி நல்ல வேலை கிடைத்தது என்றால், வீடு என்ற இலட்சியம் மறந்து, வேறு சிந்தனைகளில் மனம் போகும்போது, அங்கே, அந்த இலட்சியமும் பாழாகிறது.


இலட்சியம் இல்லாத வாழ்வு, முதுகெலும்பு இல்லாத மனிதனைப்போல!

      அங்கே, வெறும் வாழ்க்கை மட்டும் இருக்கும், ஆனால் வாழ்க்கையின் போராட்டங்களில் உள்ள சுவாரஸ்யமும் உற்சாகமும் தொலைந்திருக்கும்.

      சரி, நான் என் இலட்சியத்தில் உறுதியாகவே இருக்கிறேன், எனக்கு எதிர்பார்த்த நிலை அமையவில்லையே, என்ன செய்வது?, உண்மைதான். இந்த மனநிலையில் உள்ளோர் மிக அதிகம்பேர்தான்.

      இப்போது நம்மிடம் மிஞ்சி இருப்பதும், இலக்கை அடைய உறுதி இருந்தும் அதை அடைய முடியவில்லையே, என்ற எண்ணத்தில், ஏக்கத்தில் உள்ளவர்கள் மட்டுமே! 

   இவர்களே, இலட்சியத்தை அடைய வாய்ப்புள்ளவர்கள், இனிவரும் விசயங்களை, அவர்கள் மனதில் வைத்து கவனத்தை அதில் செலுத்தினால், விரைவில் இவர்களும் இலட்சிய உயரம் அடைவார்கள், இது உறுதி!.


எண்ணங்கள் ஏன் வெற்றி பெறுவதில்லை?

      மனித மனம் கடலை விட நீண்டது, ஆகாயத்தை விட அளவில் பெரியது, அதில் நாம், மழை நீரில் காகிதக்கப்பல் விடுவதுபோல, நம்முடைய சிறு சிறு ஆசைகளை எல்லாம் எண்ணங்களாக்கி, மனதினை அதிலேயே, மூழ்கச்செய்கிறோம். அந்த நிலையை கடந்தால் அல்லவா, எண்ணங்கள் மூலம் வலுப்பெறமுடியும். 


கடலைக் கடக்க, காகிதக்கப்பல் உதவாதே!மனதில் தோன்றும் எண்ணங்களை, வார்த்தைகளில் எழுத முடியுமா?

      எண்ணங்கள் மனதில் உருவாகும்போது, அவற்றைக் கூச்சப்படாமல், நேர்மையாக ஒரு பேப்பரில் எழுதிவருவோமா,  எழுத முடியுமா? .

ஒளியின் வேகத்தைவிட, அதிவேகம் செல்லும், மனதின் எண்ண ஓட்டத்தை எழுத்தில் எப்படி அடைப்பது?

நினைத்தாலே, ஆயாசமாகிறது இல்லையா!, 

அப்போது அந்த ஒன்றுக்கும் உதவாத வெற்று எண்ணங்களால், நமக்கு என்ன பயன்?


      அந்த எண்ணங்களால் நாம் உண்மையாகவே, ஏதாவது நலன் அடைந்திருந்தால், அதே சிந்தனைகளை மனதில் தொடரலாம், ஆனால் அப்படி இல்லையே, பிறகு எதற்கு அந்த எண்ணங்களை, அதன் போக்கில் விடவேண்டும், நம் இலட்சியம் நிறைவேற, இவையெல்லாம்தான், நம்முன் உள்ள தடைகள்!.


சரி, இப்படி உண்டாகும், இலட்சியத்திற்கு எதிரான வெற்று எண்ணங்களை எப்படி விலக்குவது?


எண்ணங்களை நம்முடைய இலட்சிய வழிக்கு வரவைக்க, என்ன செய்ய வேண்டும்?

       முதலில் எண்ணங்கள் எதனால் தோன்றுகின்றன, யோசித்துப்பார்ப்போமா, நாம் மனம் ஒன்றி ஒரு வேளையில் ஈடுபடும்போது, நம்முடைய மனம் உடல் சிந்தனை எல்லாம் அந்த வேலையை நல்லமுறையில் முடிபப்திலேயே, இருக்கிறது, அப்போது ஏதாவது அந்தப்பணிக்கு இடையூறாக, தேவையற்ற எண்ணங்கள் நமது மனதில் இருக்கிறதா? இருக்காது, இருந்தால், அந்தப்பணி முடியாது. எனவே, 


நாம் கவனத்தை செயலில் வைக்கும்போது, நமக்குத் தேவையில்லாத எண்ணங்கள், உருவாவதில்லை!.      இதை வேறு விதமாகவும், குறிப்பிடலாம், நாம் இன்று ஒரு பணியை மாலைக்குள் முடித்தே ஆகவேண்டும். இல்லையென்றால், மேலதிகாரியின் ஏச்சுக்கு ஆளாக நேரிடும், என்ற சூழ்நிலையில் என்ன செய்வோம்?, வேலையை குறித்த நேரத்தில் முடித்துவிடுவோம், இல்லையா?!

      சரி, அதெல்லாம் வேலை இருப்பவர்க்கு, நமக்குதான் வேலையே இல்லையே, நாம் வெறுமனே இருக்கிறோம்! ஆனால் நமக்கும் இலட்சியம் இருக்கிறது, 

இப்போது வெறுமனே இருக்கும் மனதில், ஏகப்பட்ட எண்ணங்கள் ஓடுகின்றனவே, மனதை கட்டுப்படுத்தமுடியவில்லையே,என்ன செய்வது?! இப்படி உள்ள வெற்று சிந்தனைகளே, அதிகம் நம்மை பாதிக்கிறது.

இதிலிருந்து நாம் தொடங்குவோம், இதுவே நல்ல தொடக்கமுமாகும்!.

தேவையற்ற பயன்தராத எண்ணங்கள் மனதை ஆக்ரமித்து, தேவை இல்லாத குப்பைகளை மனதில் திணிக்கிறதே, அதை எப்படி கட்டுப்படுத்துவது?


எண்ணங்கள் நம் இலட்சியம் நோக்கியே நம்மை செலுத்தவேண்டும், நம் சிந்தனைகள், செயல்கள் எல்லாம் அதன் படியே இருக்கவேண்டும்.

எண்ணங்களை இலட்சியத்தை நோக்கி எப்படி செலுத்துவது?  

      முதலில் எண்ணங்களை சரிசெய்வோம்! எனக்கு தேவையில்லாத எண்ணங்கள் எல்லாம், மனதில் ஏன் எழுகின்றன? எங்கு இருக்கும்போது எழுகின்றன?,

      தேவையற்ற எண்ணங்கள் உருவாகும் சூழ்நிலை, இடம் அறிந்து, அந்த இடத்தை தவிர்த்து, வேறு இடம் வந்து, நம் இலட்சியத்தை நினைப்போம்! முறையான பயிற்சிகளின் மூலம் இப்போது எண்ணங்கள் சற்றே மாறி, நம் இலட்சியத்தை நோக்குகிறதா? சரி,

      இலட்சியத்தை அடைய திட்டங்கள் வைத்திருப்போம் அல்லவா? இப்போது அதை நினைப்போம், ஆனால், அதை நினைக்குமுன்னே, ஆரம்பத்திலேயே, எண்ணங்கள் அதைக்கைவிட்டு வேறு திசையில், உடனே செல்கிறதே, 

ஏன்? என்ன ஆச்சு! எண்ணங்கள் ஏன் அதில் ஈடுபடவில்லை, யோசிப்போமா!.

      எண்ணங்கள் நம்மை மீறி உருவாகும் ஆற்றல்மிக்கவை, ஆனாலும், நம்மால் கட்டுப்படுத்தமுடியும்,


நம்மால் மட்டும்தான், நமது எண்ணங்களைக்கட்டுப்படுத்தமுடியும்!. 


அவதார் படத்தில், நாயகன் ஜாக், அந்த இராட்சசப்பறவையை பழக்கப்படுத்த எவ்வளவு சிரமப்படுவான், இறுதியில் அதை வென்று, அடடாகாசமாக வான வீதியில், உற்சாகவலம் வருவான் இல்லையா, அதுபோல, நாமும் எண்ணங்களை அடக்கினால், செயல்களில் வெற்றி கண்டு, மனதில் நம்பிக்கை உற்சாகம் கொண்டு வாழலாம்.

      எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும், நம் இலட்சியம் நோக்கியே எண்ணங்கள் பயணப்பட வேண்டும், மாறாக எண்ணங்களின் போக்கில் நாமல்ல! எண்ணங்களின் வழியே போனால், நாம் போகுமிடம், நமக்கே தெரியாது!

எண்ணங்கள் எப்படி கட்டுப்படும்?

      எல்லாம் நேரம்தான் சார், காரணம்! என்ன இது, கடைசியில் இங்கும் ஜோசியம்தானா, என்று கலவரப்பட வேண்டாம், இது ஜோசியம் இல்லை, நாமும் ஜோசியக்காரனும் இல்லை.

      வேலை உள்ளவர்களெல்லாம், நிற்கவே நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள், இவர்களுக்கெல்லாம், நாள் முழுவதும் மனதில் வெற்று எண்ணங்கள் ஓடுவது இல்லை, மாறாக அவர்களின் எண்ணங்கள் எல்லாம், அன்றைய தினத்தின் அலுவல்களில்தான் இருக்கும்.

வேலை இல்லாமல் இருப்பது அல்லது,
வேலை இருந்தாலும் அதிகப்பணி இல்லாமல், இருப்பவர்களுக்கெல்லாம்,
சமயங்களில் மனம் அலைபாயும். 

அதை கட்டுப்படுத்தத்தான் இந்த நேரக்கணக்கு!. 

      எனக்கு தினமும் ஏதேதோ எண்ணங்கள் தோன்றுகின்றன, நான் என்ன செய்யவேண்டும்?, எப்படி நம்மை அதிகம் பாதிக்கும் வெற்று எண்ணங்களை மனதிலிருந்து, வேரறுப்பது?

விரைவில், சரிசெய்யலாம்! 

அடுத்த பதிவில் சந்திப்போம்!.


Saturday, August 19, 2017

எண்ணங்களை தூய்மை செய்து, இலட்சியத்தை அடைவது எப்படி?

எண்ணங்கள்!   - 1      ஏழை பணக்காரன் பாகுபாடின்றி, எல்லோருக்கும் ஏற்றத்தாழ்வின்றி இறப்பைப்போல அனைவருக்கும் பொதுவாக கிடைப்பவைதான், சிந்தனைகள் என்றால், சிலருக்கு அதிர்ச்சியாகக்கூட தோன்றலாம், ஆயினும் அதுதானே, உண்மை!

      அவரவர் சூழ்நிலைகளால், வாழ்வியல் தன்மைகளால் எண்ணங்கள் மாறுமே தவிர, எண்ணங்கள் யாருக்கும் உதிக்காமல் இருந்ததில்லையே, எண்ணங்கள் இல்லை என்றால், புதிய கண்டுபிடிப்புகள் இல்லை, புதிய கலைகள் இல்லை, புதிய சிந்தனைகள் இல்லை, புதிய நாகரீகங்கள் இல்லை, இன்னும் சொல்லப்போனால், எண்ணங்கள் இல்லாவிட்டால் மனிதனே இல்லை. எண்ணங்களே, மனிதனின் ஆற்றலை, இந்த உலகில் பரவச்செய்யும் அற்புத செயல்களாக அமைகிறது.

      எல்லோருக்கும் எண்ணங்கள் இருக்கிறது, ஆயினும் ஒரு சிலரே வெல்கின்றனர், அது ஏன்?

“நானும் பிறந்ததிலிருந்து, இந்த துன்பம் தரும் பற்றாக்குறை வாழ்வில் இருந்து விடுபட நினைக்கிறேன், ஆனால், முடியவில்லை, மீண்டும் மீண்டும் அதிலேயே உழல்கிறேன், என்னால் என் கஷ்டத்திலிருந்து மீள முடியவில்லையே”,

“நானும் நினைவு தெரிந்த நாளிலிருந்து, பொறுப்புள்ள குடும்பத்தலைவனாக மாற ஆசைப்படுகிறேன், நான் நினைத்தாலும், எனக்கு வேறு விதமாகவே, முடிவுகள் வருகின்றனவே”,

“நான் என் கடனை தீர்த்து, என் குடும்பத்தை மன மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன், ஆகமுடியவில்லையே,”

“நான் என் தீய பழக்கங்களில்ருந்து விடுபட்டு, நல்ல மகனாக, நல்ல கணவனாக, நல்ல தந்தையாக இருக்க ஆசைப்படுகிறேன், என்னால் முடியாமல், நான் மீண்டும் மீண்டும், என் குடும்பத்திற்கு பாரமாகிறேனே,”

அது ஏன்?இதுபோன்று ஏராளமான கேள்விகள், நம் முன்னால்! விடைகள் தான் இன்னும் கிடைக்கவில்லை, என ஏங்கும் அன்பர்கள் ஏராளம் உண்டு நம் நாட்டிலே!

      வழிகள் சரியாக புலப்படாத காரணத்தினால் அல்லது, கிடைத்த வழிகளில் பயணிக்கலாம் என்று எண்ணியே நம்மவர்கள் எல்லாம் போலி சோதிடர்களிடமும் போலி சாமியார்களிடமும் சிக்கிக்கொண்டு, வெளிவர முடியாமல் அதிலேயே அல்லலுறுகின்றனர்.


      நாம் ஒன்றை மட்டும் நினைத்து, இறைவனுக்கு நன்றி கூறுவோமா? அது உங்களின் எந்த இறைவனாக இருந்தாலும் சரி, முதலில் ஒரு நன்றியைக் கூறிவிடுவோம், 


இனி எண்ணங்களை ஆள்வோம்...

ஞானா.
அடுத்த பதிவு விரைவில்..


New Posts will be in your mail!

கமோடிடிவணிகம்–அறிமுகம்!

Total Pageviews