Friday, December 6, 2013

மடிபா , ஒரு முறை எங்களுக்காக, இந்திய மண்ணில் பிறங்கள்!

இன்றைய நவீன உலகினில், பழமையைப்   போற்றுவது என்பது எளிதில்  காணக்கிடைக்காத அரிய ஒரு நிகழ்வு.

இத்தகைய அவசர உலகினில் நேற்றைய வெற்றிச்சரித்திரம் , அடிமை ஆப்பிரிக்க மக்களின் மொழிவாரி,இன வாரி அடிப்படை வேறுபாடுகள் களைந்து, அவர்களை ஒன்றிணைத்து , மாபாதக இன அடிமை அடக்குமுறைக்கு எதிராக போராடி , எத்தலைவனும் பெறாத அல்லது பெற விரும்பாத 27 ஆண்டு கால சிறை வாச இன்னல்களை,துயரங்களை தன் இனத்திற்காக இன விடுதலைக்காக  அனுபவித்து,  தனிப்பட்ட வாழ்வினை தியாகம் செய்து, தாயக மக்களுக்கு விடுதலை காற்றை பெற்றுத்தந்த பெருவீரன், தியாகத் தூண் , அந்த தேசத்தந்தையை தாயகத்தின் அரியணையில் அமரவைத்து பெருமிதம் கொண்ட ஆப்பரிக்க மக்கள் கொண்டாடிய  ,உலகம் போற்றிய  ,  சரித்திரம் நிகழ்த்திய தனிப்பெரும் தலைவன் இன்று நம்மிடையே இல்லை, இந்தியரான நமக்கும் அத்தலைவனை இழந்த ஆப்பிரிக்க மக்களின் ஆழமான சோகம், இயல்பாக வருவதில் ஒன்றும் வியப்பில்லை!

பாரதத்திருநாட்டின் ஒப்பற்ற விடுதலை போராட்ட தலைவனை, அண்ணல் அடிகளை  தன்  ஆதர்சன நாயகனாக, அவர்தம் இந்திய விடுதலைப்போராட்ட முறைகளை தன் தாயக விடுதலைப்போராட்ட முறைகளாக மாற்றி , வன்முறைப் பாதையிலிருந்து , அகிம்சைப்பாதைக்கு விடுதலை வேட்கைப்   போராட்டத்தை மாற்றி, தன்னை இழந்து, தன வாழ்நாளின் பெரும்பகுதியினை சிறையில் கழித்து , தன் இன அடிமைத்தளை நீக்கி தேச விடுதலை கிடைக்கச் செய்த உத்தமர் அல்லவா அவர் ?

நாம் வாழும் காலத்தில் காந்தியடிகள் இல்லை, தன்னலம் கருதாத் தலைவர்கள் இல்லை, தன் சாதனைக்காக தன் வாழ்நாள் முழுதும் அரியணையில் அமரவேண்டும், பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற பேராசையின்றி, மறுமுறை அரியணை ஏற மறுத்து, அத்துடன், தீவிர பொதுவாழ்விலிருந்தும் விலகி , தாயக இளந்தலைமுறைக்கு வழிவிட்ட அந்த அற்புதத்தலைவன் நம்மிடையே இல்லையே , நம் தாய் நாட்டில் இல்லையே, நமக்கு அத்தகைய தலைவன் எப்போது கிடைப்பான் என்ற ஏக்கத்தில் , ஆப்பிரிக்க மக்களின் சோகத்தில் இயல்பாகப்  பங்கெடுத்து , தாய்த் திருநாட்டின் கடைக்கோடி குடிமகன், தமிழ்மகன் , மறைந்த மாமனிதனுக்கு தன சிரம் தாழ்த்தி  அஞ்சலி செலுத்துகிறான்! வணங்குகிறான்!!

மடிபா , 

ஒரு முறை எங்களுக்காக, 
இந்திய மண்ணில் பிறங்கள்!


No comments:

Post a Comment

Total Pageviews