Monday, June 30, 2014

சதுரகிரி யாத்திரை                  உலகாளும் ஈசன் வாசம் புரியும் சதுரகிரி யாத்திரை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்    போதெல்லாம் மனதில் இனம் புரியா  உற்சாகம்,தெம்பு உத்வேகம் பரவும். குழந்தைகளின் குதூகலம் போன்ற மன  உணர்வுடன் , அந்த உணர்வின் மகிழ்வை, மனதில் இருத்திக்கொண்டு  யாத்திரையை இனிதே தொடங்க விளைந்தோம்!

இந்த முறை இராஜபாளையம் நண்பர் அழைக்க, நாம் உடனே கிளம்பினோம்,  ஈசன் குடி இருக்கும் அற்புத தவ ஞான மலைக்கு.

ஒரு பிரதோஷ தினத்தில், மாலை வேளையில் , பிரதோஷ காலத்தில் , ஈசனடி தொழுது யாத்திரையை தொடங்கினோம்.


முதல் முறை சதுரகிரி யாத்திரை தொடங்கும் அன்பர்க்காக, சில பயண விவர குறிப்புகள்!சதுரகிரி யாத்திரை , தாணிப்பாறை எனும் மலை அடிவாரத்திலிருந்து தொடங்குகிறது!


தாணிப்பாறை , வத்திராயிருப்பு எனும் சிற்றூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது! 

வத்திராயிருப்பு, 
மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர்  சாலையில் , 

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு முன்,

கிருஷ்ணன் கோயில் 
எனும் ஊரிலிருந்து 
15 கி.மீ தொலைவில் உள்ளது! 

பேருந்துகளில்  வத்திராயிருப்பு வரை  சுலபமாக வந்து விடலாம், வத்திராயிருப்பிலிருந்து தாணிப்பாறை செல்ல நீண்ட நேர இடைவேளையில் வெகு சில பேருந்துகளே இயக்கப்படுவதால் , யாத்ரீகர்கள் ஷேர் ஆட்டோக்கள் மூலமே தாணிப்பாறை அடிவாரம் வர வேண்டும் என்பதை மனதில் இருத்தவும்!

இனி நாம் யாத்திரையைத்தொடங்குவோம்!

வழியில் தர்மபுரி அடியார் ஒருவரும்  இணைந்துகொள்ள, யாத்திரை நலமுடன் ஆரம்பம். கூடவே  நண்பரின் 10 வயது மகளும்.

பவுர்ணமிக்கு  முந்தைய பிரதோஷ தினம்  ஆகையால்,அடியார் கூட்டம் வந்து கொண்டே இருந்தது , வருவோர்  எல்லாம்,அன்று இரவு மலையில் தங்கிவிட்டு  மறுநாள் காலையில் ஈசனை தரிசித்துவிட்டு, முடிந்தால் பவுர்ணமி இரவும் தங்கிவிட்டு பிறகே திரும்புவர்.

அடிவாரத்தில் நிதானமாக சமவெளியில் ஆரம்பிக்கும் யாத்திரை போகப்போக சற்றே கடுமையானதாக ஆகும், எப்படி அடியார்க்கெல்லாம் ஈசன் கடும் சோதனைகளைக்கொடுத்து , புடம் போட்ட தங்கம் போல அவர்களை பக்குவமாக்கி, மனதினை செம்மையுறச்செய்து , 

ஆட்கொள்கின்றானோ  அவ்வண்ணம்  அன்பர்க்கெல்லாம் , இது சாதாரண மலை ஏற்றம்  இல்லையப்பா, இது உங்கள் வாழ்வையும், சிந்தையையும், செயலையும் மாற்றப்போகும் தெய்வீக  பயணமப்பா, இதிலே சிந்தை ஒருமித்து ஈஸ்வர சிந்தனையில்  மனதினை இருத்திக்கொண்டு,  உடல் வருத்தத்தினை மனதில் கொள்ளாமல்,பொருட்படுத்தாமல் கடுமையான விரத நிலையில் ஒரே சிந்தனை அதுவே  சிவ சிந்தனை எனும் உறுதிப்பாட்டில் கடுமை கொண்டு மலை ஏறும் போது , எத்தனை கடுமையான ஏற்றங்கள் வந்தால் என்ன?, நாடி வரும் அடியாரை அந்த ஈசனே, அன்பர் துயர் துடைக்க ஓடோடி வரும் உலக நாயகனே , வழி நடத்துவான், நம்மை , நிச்சயம் ஏற்றி விடுவான், நம்மை அளித்துக்காப்பான்.

இவ்வண்ணம் சிந்தையில் சிவனை வைத்து , சிவ நாம பிரார்த்தனையுடன் மலை ஏறும்போது . சற்று நேர நடையில் தாணிப்பாறை அடிவார கருப்பசாமி கோவிலும் சற்றே தொலைவில் முதல் மலை ஏற்றமும் வரும். சமீபத்திய  மழையால்,நம் பாதையில் சிற்றோடைகளை அடிக்கடி கடக்க நேர்ந்தது, அற்புத அனுபவம்! பிரதோஷ மாலை வேளை, மனதிற்கு உற்சாகம் ஊட்ட, நடையில் வேகம் தானாக வந்தது.ஆயினும், அனைவரும் நிதானமாகவே நடந்தோம், குழந்தை கூட வருவதால்.

ஒரு மணி நேரம்  ,  சிவன் மலையின் இயற்கை எழிலை கண்களால் பருகிக்கொண்டும், பறவைகளின் வரவேற்பு கீதங்களை காதால் இரசித்துக்கொண்டும் இவற்றை எல்லாம் அளித்து ,நமக்கு மன  உத்வேகம் தந்து  நம்மைக்காக்கும் ஈசனை மனதால் மீண்டும் பணிந்து நடக்கும்போது , சங்கிலிப்பாறை வந்துவிட்டது. யாத்திரை பாதையில்  பெரும்பாலும் நீரோடும் ஓடை குறுக்கிடும் இடம் அது. அதிக நீர் ஓடும் காலங்களில் ஆழம்  அதிகமாக இருக்கும் காரணத்தினால்,பாதையின் இடது புறம் இரண்டு பாறைகளின் மேல்,கனமான சங்கிலிகளைப் பிணைத்திருப்பர். அதனைப்பிடித்துக்கொண்டு , அன்பர் எல்லாம் அவ்வோடையைக்கடப்பர்.  அவ்வண்ணமே,நாமும் கடந்தோம். கொஞ்சம் தொலைவு சென்று சற்று நேரம் அமர்ந்தோம்.

பாறைகளினூடே யாத்திரையை  மீண்டும் தொடர்ந்தோம்.

அருமையான மாலைப்பொழுது,இருள் சூழும் நேரம் எனினும், பவுர்ணமி சமயம் ஆகையால், மனதிற்கு இதமளிக்கும் ஈஸ்வரப்பரிசமாய் நம்மைத்தழுவி , நான் இருக்கிறேன் நீ நட என நம்மைத்தொடர்ந்து கூடவே வரும் அரிய மூலிகைகளில் நனைந்து வரும் தென்றல் காற்றை  சுவாசித்து நடப்பதே, புத்துணர்வு தரும் பேரின்பம் ! 

மானிடப் பிறப்பின் அர்த்தம் தேடும், உலகாளும் உமை நாயகன்  ஈசனடி நாடும் பாத  யாத்திரையின் நடுப்பகுதியில் நாம்!

பாதைகளில் இப்போது மலையிலிருந்து ,  சுந்தர மகாலிங்கமாகவும் சந்தன மகாலிங்கமாகவும் விளங்கும் ஈசனை மனமார தரிசித்துவிட்டு , பிரதோஷ வழிபாட்டினை நிறைவாக முடித்துவிட்டு, ஆனந்தமாக, மலை இறங்கும் அன்பர் எல்லாம் கண்களில் மகிழ்ச்சி ஒளி பரவ, உலகம் ஆளும் ஈசனை அவன் பதம் பணிந்து,அவனிடம் சரணடைந்து , இனி நீயே எல்லாம், உண்டாக்கிய உன்னிடத்தில் வந்துவிட்டேன், எனை ஆட்கொண்டு , என்னால் சுற்றம்,நட்பு யாவரும் பலன் பெரும் வண்ணம் எனைச் சீராக்கு, மன அழுக்குகளை நீக்கி, ஆசை,துவேஷம் ஒழித்து , மனிதனாக என்னைக்கடைத்தேற்று , எனத்  தொழுது, அதனை அடைந்த மன எழுச்சியில் , அவர்கள் நெஞ்சம் குளிர்ந்து  , அன்பே  உருவாக, பரவசத்தில் நடந்து வருகிறார்கள்.

இதுதான், சித்தர்கள் போற்றும் ஈசன் மலையின் உயரிய தத்துவம் ! 

நாடும் அடியார்  யாவருக்கும், நலனே அளிக்கும் கருணைக்கடல் உறையும் இடமல்லவா? 

இறை அளித்த இயற்கை இன்பம் பருகிக்கொண்டே நடக்குங்கால் , சிவ தரிசனம் பெற்று மலை இறங்கும் அன்பர் யாவரும் அணிந்த திருநீற்று வாசம் அற்புத மூலிகைக் காற்றோடு கலந்து, நம் மூச்சில் மிக உயரிய ஞானவாசமாக , ஒரு கணம் இந்த உலகை மறக்கச்செய்து, நாம் இருப்பது கயிலாயத்திலா, எனும் பேரின்ப சிவானுபவத்தில் மனம்  திளைக்க,இந்த அற்புத அனுபவம் என்றும் பசுமையாக நம் மனதில் இருக்கும்! 


சிவ வாசமே , நம் சுவாசமானது!--- தொடர்வோம்..!

No comments:

Post a Comment

New Posts will be in your mail!

கமோடிடிவணிகம்–அறிமுகம்!

Total Pageviews